குடும்ப வன்முறை என்றால் என்ன?
குடும்ப வன்முறை என்பது உடல், உளவியல், பாலியல் மற்றும் பொருளாதார வன்முறைகளை உள்ளடக்கியது. இது கூட்டாண்மை உறவு அல்லது குடும்பத்தில் நிகழ்கிறது: தம்பதியினருக்கு இடையில், அல்லது ஜோடியாக வாழும் அல்லது வாழ்ந்தவர்களுக்கு இடையில். அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்களா அல்லது பிரிந்து வாழ்கிறார்களா என்பது முக்கியமல்ல. பெற்றோர் மற்றும் குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவர்கள், தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் அத்தைகள் போன்ற பிற குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான வன்முறையும் குடும்ப வன்முறையாகும்.
குடும்ப வன்முறையில் பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் வெவ்வேறு வகையான குடும்ப வன்முறைகள் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
எடுத்துக்காட்டாக: அடித்தல் - அச்சுறுத்துதல் - அவமானப்படுத்துதல் - கொடுமைப்படுத்துதல் - கழுத்தை நெரித்தல் - வீட்டில் ஒருவரைப் பூட்டுதல் - அவர்களின் தலைமுடியை இழுத்தல் - கட்டுப்படுத்துதல் - தொலைபேசி அழைப்புகள் செய்வதைத் தடை செய்தல் - உடல் உறவு கொள்ள வற்புறுத்துதல் - திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துதல் - பணத்தைப் பிடிங்கிக் கொள்ளுதல் - புறக்கணித்தல் போன்றவை.
குடும்ப வன்முறை பெரும்பாலும் ஒரு சுழற்சியில் நடைபெறுகிறது. இது எப்போதும் வேகமாக சுற்றும் சுழல் போல உருவாகிறது. ஆரம்பத்தில் உறவில் பதற்றம் எழுகிறது. பிறகு வன்முறை வெடிக்கிறது. அதன் பிறகு அமைதி, நல்லிணக்கம் மற்றும் செயலுக்காக வருந்துதல் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் பதற்றம் உருவாகி, மீண்டும் வன்முறை வெடிக்கிறது. இந்த வன்முறை சுழற்சியில் இருந்து விடுபடுவது கடினம். மேலும் ஆதரவில்லாமல் இது சாத்தியமில்லை. எனவே உதவி பெறுவது மிகவும் முக்கியம்.
பிரிவு வன்முறை, குடும்ப வன்முறையின் ஒரு சிறப்பு வடிவம். பிரிவினைகள் கடுமையான வாழ்க்கை நிகழ்வுகள். பிரிவதற்கு முன்பும், பிரியும் நேரத்திலும், பிரிந்த பின்பும் குடும்ப வன்முறையை அனுபவிக்கும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. தீவிர உறவு மோதல்கள் மற்றும் குடும்ப வன்முறை ஏற்படாத உறவுகளில் கூட, பிரிவினை சூழ்நிலைகளில் வன்முறை ஏற்படலாம். பிரிவினையுடன் தொடர்புடைய மோதல்கள் தீவிரமடைந்து ஆபத்தான வன்முறைக்கு வழி வகுக்கக்கூடும். பாதிக்கப்பட்டவர்கள் பிரிந்திருக்கும் சூழ்நிலைகளில் ஆதரவைப் பெறுவது முக்கியம்.