உளவியல் வன்முறை

உளவியல் வன்முறை பெரும்பாலும் படிப்படியாகத் தான் தொடங்குகிறது. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் பொதுவாக நீண்ட காலம் உளவியல் வன்முறையை அடையாளம் காணமாட்டார்கள்.

உளவியல் வன்முறை என்றால் என்ன?

உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாக இருக்கலாம். அவமதித்தல், அவமானப்படுத்துதல், மிரட்டுதல், குற்ற உணர்வைத் தூண்டுதல், கூச்சலிடுதல், கொலை மிரட்டல்கள், பின்தொடர்தல், குழந்தைகள் அல்லது முதியவர்களைப் புறக்கணித்தல், பொறாமை கொண்ட நடத்தை அல்லது உளவியல் ரீதியான பயங்கரவாதம் போன்ற வன்முறைச் செயல்கள் இதில் அடங்கும். பொருட்களை அழிப்பது அல்லது செல்லப்பிராணிகளைச் சித்திரவதை செய்வதும் இதில் அடங்கும்.

உளவியல் வன்முறை சமூக மற்றும் பொருளாதார வடிவங்களையும் உள்ளடக்கியது. இதில் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது.

  • சமூக வன்முறை: உதாரணமாக, ஒரு நபர் குடும்ப உறுப்பினர்களையோ நண்பர்களையோ சந்திப்பது தடைசெய்யப்படுவது. அல்லது உடன் வேலை செய்யும் சக ஊழியர்களைச் சந்திக்கும் போது ஒருவர் கட்டுப்படுத்தப்படுவது.
  • பொருளாதார வன்முறை: ஒருவர் வேலை செய்ய தடை விதிக்கப்படுவது அல்லது ஒரு வேலையைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவது. அவருடைய நிதியை கட்டுப்படுத்துவது, பிடுங்குவது அல்லது அவரிடமிருந்து பணத்தைச் சுரண்டுவது.

அறிய வேண்டியவை

சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உளவியல் வன்முறைகள் ஏற்படுகின்றன. இது உடல் ரீதியான வன்முறையை விட தெளிவற்றது. உளவியல் வன்முறையும் சுவிட்சர்லாந்தில் தடைசெய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறது.

உளவியல் வன்முறை என்பது உடல் ரீதியான வன்முறையைக் காட்டிலும் மிகவும் நுட்பமானது மற்றும் வெளிப்படையாகத் தெரியாது, ஆனால் உளவியல் வன்முறை உடல் ரீதியான வன்முறையைப் போலவே தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். பாதிக்கப்பட்டவர்கள் சுயமரியாதை குறைவு, தூக்கம் மற்றும் உணவுக் கோளாறு, கவனம் செலுத்துதல் மற்றும் செயல்படுவதில் சிரமம், கவலை அல்லது மனச்சோர்வு போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே முன்கூட்டியே உதவி பெறுவது முக்கியம்.

எங்கே உதவியைப் பெறலாம்?

ஆபத்து அல்லது தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தால், காவல்துறை உதவும் (117).

பின்வரும் மையங்கள் இலவச ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குகின்றன:

குடும்ப வன்முறைக்கு எதிரான தொடர்பு மையம், 062 550 20 20, www.ahg-aargau.ch

பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையம் ஆர்காவ், 062 835 47 90 அல்லது ஆன்லைன் உரையாடல், www.opferberatung-ag.ch

தொலைபேசி 143 – உதவும் கரம் (Die Dargebotene Hand) (24 மணி நேரமும்), 143, www.143.ch, ஆங்கிலத்தில் பேச அவசர அழைப்பு எண் 0800 143 000

பெண்கள் தங்குமிடம் ஆர்காவ்-சோலோதுர்ன், 062 823 86 00 (24-மணி நேர அவசர அழைப்பு எண்), www.frauenhaus-ag-so.ch

ஸ்வ்யூஷேஹால்ட் , 056 552 08 70 (சூரிச்), www.zwueschehalt.ch (குழந்தைகளுடன் அல்லது குழந்தை இல்லாத ஆண்களுக்கான தங்குமிடம். நிதி பங்களிப்பு தேவைப்படும்).