சுகவீனம் மற்றும் விபத்து

சுவிசில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு விபத்து- மற்றும் சுகவீன காப்புறுதியை கொண்டிருக்க வேண்டும். இந்த தனியார் காப்புறுதிகள் விபத்து, சுகவீனம் அல்லது கர்ப்பகாலங்களின் அவற்றின் செலவை பொறுப்பேற்கும். இந்த இரு காப்புறுதிகளையும் இங்கு வந்து 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.

சுகவீனக்காப்புறுதி (அடிப்படைக்காப்புறுதி)

சுவிசில் வாழும் அனைத்துக்குடியிருப்பாளர்களும் கட்டாயம் சுயாதீனமாக சுகவீனக்காப்புறுதி (அடிப்படைக்காப்புறுதி, Grundversicherung) செய்தல் வேண்டும். சுவிசிற்குள் வாழ்வதற்கு எவர் வந்தாலும் அவர்கள் 3 மாதங்களுக்குள் இதை செய்ய வேண்டும். இக்காலப்பகுதியில் சுகவீனமாயிருப்பின் கடந்தகாலத்திற்கான செலவையும் பெற்றுக்கொள்ளலாம். இவ் அடிப்படைக்காப்புறுதி பல தனியார் சுகவீன காப்புறுதிநிறுவனங்களால் (Krankenkassen) வழங்கப்படுகிறது. காப்புறுதிநிறுவனத்தெரிவு சுயாதீனமானது. சுவிசில் வசிக்கும் அனைவரும் சுகாதாரக்காப்புறுதியில் இணையவேண்டும். காப்பீடு செய்தவர் மாதாமாதம் கட்டணம் செலுத்தவேண்டும். இம்மாதக்கட்டணம் சுகவீனக்காப்புறுதி நடைமுறைகளின் வித்தியாசத்திற்கேற்ப வித்தியாசப்படுவதால் இத்தொகைகளை ஒப்பிடுவது நல்லது. சுகாதாரக்காப்புறுதி வருடத்தில் ஒருமுறை (நவம்பர்) மட்டும் மாற்றலாம். அடிப்படைக்காப்புறுதியானது சுகவீனத்திற்கு மட்டுமல்லாமல், கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பிற்குமான செலவுகளையும் பொறுப்பெடுக்கும். சேவைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பு: சாதாரணமாக பல்சிகிச்சை மற்றும் கண்ணாடிகளுக்கான செலவுகள் சொந்தமாக செலுத்த வேண்டும்.

விபத்துக்காப்புறுதி

ஒருவர் கிழமையில் 8 மணித்தியாலத்திற்கு மேல் வேலை செய்தால், வேலைசெய்யுமிடத்தில் வேலை கொடுப்பவரால் வேலை மற்றும் ஓய்வு நேரங்களுக்கும் விபத்துக்காக காப்புறுதி செய்யப்படுகிறது. எவர் குறைவாக வேலை செய்தால் ஓய்வு நேரங்களுக்கு காப்புறுதி செய்யப்படாது, சொந்தமாக செய்யவேண்டும். இது சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் வேலை இல்லாதவர்களுக்கும் பொருந்தும். வேலை இல்லாதவர்கள் தமது சுகாதாரக்காப்புறுதியில் விபத்துக்கும் காப்புறுதி செய்தல் வேண்டும். சொந்தத்தொழில் செய்பவர்களும் வேறு காப்புறுதி நிறுவனங்களில் விபத்துக்காப்புறுதி செய்தல் வேண்டும். காப்புறுதி செய்தவர் மாதாமாதம் கட்டணம் செலுத்தவேண்டும். தொழில்புரிவோரில் அவர்களின் சம்பளத்தில் இது நேரடியாக கழிக்கப்படும்.

கட்டணக்குறைப்பு

எவர் தமது சுகாதாரக்காப்புறுதிக்கட்டணம் செலுத்தமுடியாத நிலையிலுள்ளாரோ, குறித்த நிபந்தனையின்கீழ் அவருக்கு அடிப்படைகாப்புறுதிக்கு கட்டணக்குறைப்பு (Prämienverbilligung) கிடைக்கிறது. மருத்துவகாப்புறுதிக் கட்டணக் குறைப்புக்குரிய விண்ணப்பங்களை முதல் வருடத்தில் டிசம்பர் 31ம் திகதிக்குமுன் அறோ மாநில சமூக காப்புறுதி இலாகா SVA வுக்கு அனுப்பவேண்டும். இது அனுமதிக்கப்பட்டால் அடுத்தாண்டு குறைந்த கட்டணம் செலுத்தலாம். மாநிலத்திற்கு பிந்தி வந்து குடியேறியிருந்தால் விசேட விதிமுறைகளுண்டு. கிராமசபைக்கிளையிலுள்ள சமூககாப்புறுதி நிறுவனத்தில் (Gemeindezweigstelle der Sozialversicherungsanstalt SVA) கட்டணக்குறைப்பு பற்றி தகவல் தெரிவிப்பதுடன் அதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது.

அடிப்படைச்சுகாதாரக்காப்புறுதியுடனாக மேலதிககாப்புறுதி

அப்படைக்கட்டாயக்காப்புறுதியுடன் சுயாதீனமாக பல மேலதிக காப்புறுதிகளையும் (Zusatzversicherungen) செய்யமுடியும். இவை அடிப்படைக்காப்புறுதி செலுத்தமறுக்கும் சேவைகளை வழங்கும், உதாரணமாக பல் சேவைகள். இம்மேலதிக காப்புறுதிகள் பொதுவாக சகல சுகாதார காப்புறுதிகளும் வழங்குகின்றன. எவரையாவது மேலதிககாப்புறுதி செய்யலாமா அல்;லது ஏற்காமல் இருப்பதா என்பதை சுகாதாரகாப்புறுதிநிறுவனங்கள் சொந்தமாக முடிவு செய்ய முடியும்.